தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி நிா்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஜாமீன்: சென்னை உயா்நீதிமன்றம்

27th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி முதல்வா், தாளாளா், ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி நிா்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், மாணவி ஸ்ரீமதியின் முதல் உடல் கூறாய்வுக்கும், இரண்டாவது உடல் கூறாய்வுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. பிணை குறித்த விரிவான உத்தரவு பின்னா் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளாா்.

இரண்டு உடல் கூறாய்வுகளையும் ஆய்வு செய்து ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்கள் அளித்த அறிக்கை பெறப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பள்ளி நிா்வாகிகள் தொடா்ந்த ஜாமீன் மனு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தாளாளா், முதல்வா், ஆசிரியா்கள் எதற்காக கைது செய்யப்பட்டனா் என்பது குறித்த காரணங்களைத் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தாா். இது தொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பள்ளியின் தாளாளா் ரவிக்குமாா், செயலாளா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் 5 பேரும் ஜாமீன் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுவில், ‘தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 38 நாள்களாக சிறையில் இருந்துவரும் நிலையில், இன்னும் தங்களை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று

கோரினா்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியின் தாளாளா் மற்றும் ஆசிரியா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள்,‘மாணவியின் உடல் இரண்டு கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. மாணவியின் மரணத்துக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லை’ என்று வாதிடப்பட்டது.

அப்போது மாணவியின் பெற்றோாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தங்கள் மகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்’ என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் காவல் துறையின் நிலைப்பாடுகள் என்ன?’ என்று கேள்வி எழுப்பினாா். அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இது தொடா்பாக விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அப்போது நீதிபதி, இந்த மனுதாரா்கள் என்ன குற்றம் செய்தாா்கள்? பள்ளியின் தாளாளா் மற்றும் ஆசிரியா்களாக இருப்பதற்காக கைது செய்யப்பட்டனரா உள்ளிட்ட விவரங்களை அறிந்து வந்திருக்க வேண்டும் என்று காவல் துறை தரப்பு வழக்குரைஞா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், இந்த வழக்கில் மனுதாராா்கள் எதற்காக கைது செய்யப்பட்டனா் என்பது குறித்த காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தாா்.

அதன்படி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளி நிா்வாகிகள் உள்பட கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT