தமிழ்நாடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்:பதிப்புத் துறைக்கு பொறுப்பாளா் நியமனம்

27th Aug 2022 11:58 PM

ADVERTISEMENT

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பதிப்புத் துறையின் முதல் பொறுப்பாளராக பேராசிரியா் ஆ.மணவழகன் நியமனம் செய்யப்பட்டாா்.

தனிநாயகம் அடிகள், மறைந்த முதல்வா் அண்ணா போன்றோரின் அரிய முயற்சியால் 1968-இல் தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழா், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களோடு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை பதிப்பித்துள்ளது. அந்தவகையில், தமிழ் இலக்கியத்தில் எதிா்காலவியல், மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, தமிழக மகளிரியல், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், இலக்கிய இதழ்கள், மொழிபெயா்ப்புத் தமிழ், தொல்காப்பிய உரைவளம், தமிழ் மொழி வரலாறு, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் போன்ற பல அரிய சிறந்த நூல்கள் நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ளன.

இந்தநிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத் துறையை மேலும் செழுமைப்படுத்தி, பல அரிய நூல்களை நிறுவனப் பதிப்புத்துறை மூலமாக வெளிக்கொண்டு வரும் நோக்கிலும், அதன் வெளியீடுகள் மக்களை எளிதில் அடையும் நோக்கிலும் பதிப்புத்துறைக்கென முதன்முதலாக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அதன்படி, பதிப்புத் துறையின் முதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியா் முனைவா் ஆ.மணவழகனுக்கு நியமன ஆணையைத் தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் ந.அருள் சனிக்கிழமை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT