தமிழ்நாடு

திருச்சி மத்திய சிறையில் மாநகர போலீசார் திடீர் சோதனை

19th Aug 2022 11:59 AM

ADVERTISEMENT

 

திருச்சி மத்திய சிறையில் முகாமில் உள்ள சிலர் வெளிநாட்டு போதைப் பொருள்கள் கும்பலுடன் தொடர்பில் இருந்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாநகர போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சி மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் மற்றும் போலி பாஸ்போர்ட் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் என 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.  இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தண்டனை காலம் முடிந்தும் தங்களை வெளியே விடவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து சமீபத்தில் 14 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் விடுவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவிலேயே தங்கியிருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. 

ADVERTISEMENT

இதனிடையே தமிழகத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்வதாக புகார் எழுந்தது. 

இதையும் படிக்கலாம் | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைந்தது என்ன தெரியுமா? 

இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் மத்திய சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியானது. 

இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 150 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா? என போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT