தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைந்தது என்ன தெரியுமா?

19th Aug 2022 10:03 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018 இல் நடந்த போராட்டத்தின்போது போலீஸாா் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து அறிக்கையை செய்தார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 17 காவல்துறை அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018 இல் ஆலையைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100 ஆவது நாள் அன்று (மே.22) பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். 

அப்போது திரேஸ்புரம், மாதாகோவில், விவிடி சிக்னல், மடத்தூர் மற்றும் மூன்றாம் மைல் போன்ற முக்கிய சந்திப்புகளில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது போராட்டக்காரர்கள் போலீசாரை மீறி ஆட்சியர் அலுவலக வளாகம் நோக்கிச் சென்றனர். அப்போது நடந்த  கலவரத்தில் போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினா். 

ADVERTISEMENT

ஆரம்பத்தில், துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர். வாகனங்கள், விளக்குக் கம்பங்கள், பெயர்ப் பலகைகள், பலகைகள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த கும்பல், சில இடங்களில் போலீசாரைத் தாக்கியதை அடுத்து சம்பவம் கலவரமாக மாறியது.

இதையடுத்து மூன்று துணை தாசில்தார்களின் உத்தரவுகளின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இது மே 22 ஆம் தேதி 12 பேரும், மே 23 ஆம் தேதி மற்றொருவர் என 13 பேர் கொல்லப்பட்டனர். ஜாமீனில் இருந்த ஒரு போராட்டக்காரர் பரதராஜ் உள்பட இருவர் காவலில் இறந்தனர், மற்றொரு போராட்டக்காரர் துப்பாக்கிச் சூட்டின் போது காயமடைந்தவர் மூன்று மாதங்களுக்குப் பிறகு இறந்தார்.

இதையடுத்து வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. 

2018 ஜூன் 4 ஆம் தேதி விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். 

இந்நிலையில், முழு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை அடுத்து, 6 மாதம் கால அவகாசம் வழங்கியது தமிழக அரசு. கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழக்கிமை (ஆக.18) சந்தித்து சமர்பித்துள்ளார்.  

இதையும் படிக்க: அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

இந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் அடங்கியுள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையின் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகள்: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோரை தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம், பின்னால் இருந்து சுட்டது தெரியவந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர் பின் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை.

காவல்துறையினருக்கு படுகாயமில்லை: போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எந்தவொரு காவல்துறையைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு அப்போதைய காவல்துறை தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் தோல்வி என்றும், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. 

உளவுத்துறை தகவலுக்கு முக்கியத்துவம் இல்லை: போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அதற்குத் தகுதியான முக்கியத்துவம் கொடுத்து அப்போதைய ஐஜி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, உளவுத்துறைத் தலைவரின் நல்ல செய்திகள் எந்த விளைவையும் தரவில்லை, ஏனெனில் நிலைமையைத் தணிக்க உடனடியாக எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

17 ரவுண்டுகள் சுட்ட போலீசார்:  துப்பாக்கிச்சூட்டின் போது காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3 ஆம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் போன்ற இடங்களில் சுடலைக்கண்ணு சுட்டுள்ளார். ஒரே போலீசார் மட்டும் 4 இடங்களில் சுட்டதன் மூலம் அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர். போராட்டத்தை கையாள்வதில் ஆட்சியர் வெங்கடேஷ் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டி வந்துள்ளார். போராட்டத்துக்கு முதல் நாள் ஆட்சியர் வீட்டில் இருந்து கொண்டே உதவி ஆட்சியரை சமாதானக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவதற்கு அழைத்துள்ளார்.

17 காவல்துறையினர் மீது நடவடிக்கை:  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 காவல்துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2018 ஆல் தென்மண்டல ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி ஆக இருந்த கபில்குமார் சர்கார், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த பி.மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ., ஒரு தலைமை காவலர், 7 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மறைந்து நின்று சுட்ட போலீசார்: எந்தவித அசம்பாவிதங்களும், ஆத்திரமூட்டாலும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது அவர்களின் கண்களுக்கு தெரியாத வண்ணம் மறைந்து நின்று குறி பார்த்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திய காவல்துறை: இரண்டு காவல் எல்லைகள் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144வது பிரிவின் கீழ் அதிகாரிகள் உத்தரவை பிறப்பித்துள்ளது, அதே நேரத்தில் தூத்துக்குடி நகரின் ஒருங்கிணைந்த பகுதியான எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதித்தும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு காட்சியாகவே உள்ளது என்றும், "இந்த விசித்திரமான மற்றும் ஒற்றைப்படை அணுகுமுறை பொது மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது. 

போலீசாரின் குரூரமான செயல்: துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரர்கள் நான்கு பக்கமும் சிதறி ஓடினர். சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் மீதும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுப்பதற்காகவே துப்பாக்கிச் சூடு என்ற போலீசாரின் வாதத்துக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய போராட்டக்காரர்களை பூங்காவில் ஒளிந்திருந்து சுட்டுள்ளதாகவும், போலீசார் தங்களின் வரம்புகளை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஆணையம், தவறு செய்த போலீசார் மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆட்சியர் மீது நடவடிக்கை: மேலும், துப்பாக்கிச் சூடு நடந்தபோது தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தனது பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட்டு அலட்சியத்துடன் கோவில்பட்டியில் இருந்துள்ளார். மேலும், எவ்வித முன்யோசனையும் இன்றி முடிவுகளை எடுத்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT