தமிழ்நாடு

கொடி மரமானது மூங்கில் குச்சி; நாற்காலியில் ஏறி கொடியேற்றிய கல்லூரி முதல்வர்! (விடியோ)

19th Aug 2022 11:53 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: கும்பகோணம் கவின் கலைக் கல்லூரி​யில் மூங்கில் குச்சியில் தேசியக்கொடியை கட்டி, நாற்காலி மீது ஏறி கல்லூரி முதல்வர் தேசிய கொடியேற்றிய விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. 

கடந்த 1887ம் ஆண்டு சென்னை மாகாண அரசாங்கத்தால் கைவினைத் தொழில் பள்ளி கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. பின்னர், கும்பகோணம் நகராட்சி கலைப்பள்ளியாக சுமார் 80 ஆண்டு காலம் செயல்பட்டது. வண்ணக்கலை, சிற்பக் கலை, விளம்பரக் கலை ஆகிய துறைகள் உருவாக்கப்பட்டன.

1965ல் தமிழக அரசின் தொழில் வர்த்தக இயக்கத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. 1973 முதல் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின்கீழ் பாடத்திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன. 1979ல் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு கவின் கலைக் கல்லூரியாக இயங்கி வருகிறது.

1991 முதல்  நான்கு ஆண்டு பட்டப்படிப்பு துவங்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இக்கல்லூரியில், ஓவியர்கள் கோபுலு, கலை கங்கா, வீர சந்தானம், என்.எஸ்.மனோகரன், சிவபாலன் உள்ளிட்டோர் படித்துள்ளனர். தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இத்தகைய புகழ்பெற்ற கல்லூரியில், கடந்த ஆகஸ்ட்.15 ம் தேதி சுதந்திர கொடியேற்ற விழாவின்போது, கல்லூரியில் கொடி மரம் இல்லாத நிலையில், கல்லூரி முதல்வர் அருளரசன், கொடி மரத்திற்கு பதிலாக மூங்கில் குச்சியில் கொடியை கட்டியபடி, மேசையும் அதன் மீது நாற்காலியும் போட்டு ஏறி நின்று கொடி ஏற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனமும், முன்னாள் மாணவர்கள் வேதனையும் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தேசியக்கொடியை ஏற்றும் போது, கொடி மரம் 90 டிகிரி நேராக இருக்க வேண்டும். கொடி ஏற்றிய பிறகு முறையாக அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். ஆனால், கவின் கல்லூரி முதல்வர் தேசியக்கொடியை ஏனோதானோ என ஏற்றி விட்டு, முறையாக மரியாதையும் செலுத்தவில்லை. மேலும், அருகில் இருந்த பேராசிரியர்களும் முறையாக மரியாதை செலுத்தவில்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியது. பாரம்பரிய மிக்க ஒரு கல்லூரி முதல்வரின் செயல்பாடு இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளது. அரசு உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT