தமிழ்நாடு

தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடர் விபத்துகளால் பலியாகும் மீனவர்கள்: தீர்வுகாண மநீம வலியுறுத்தல்

19th Aug 2022 09:50 PM

ADVERTISEMENT

 

தேங்காப்பட்டினம் மீனவர்கள் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடரும் விபத்துகளால் இதுவரை 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். முகத்துவாரப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதே மீனவர்களின் உயிரிழப்பைத் தடுக்கும்.

தமிழகத்தில் மீன்பிடித் தொழிலில் பிரசித்தி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. ஆழ்கடல் மீன்பிடிப்பில் இம்மாவட்ட மீனவர்கள் திறமைவாய்ந்தவர்கள். இங்குள்ள தேங்காப்பட்டினம் துறைமுகம் வள்ளவிளை, சின்னத்துறை, மார்த்தாண்டம்துறை, இராமன்துறை, முள்ளூர்துறை, தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.

ADVERTISEMENT

தேங்காப்பட்டினத்தில் துறைமுகம் அமைக்க வேண்டுமென பல்லாண்டுகளாக மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, 2010-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கி, 2019-ல் துறைமுகம் திறந்துவைக்கப்பட்டது. ஆனால், சரியான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், திறக்கப்பட்ட நாள் முதலே விபத்துகள் நேரிட்டு, ஏராளமான படகுகள் சேதமடைந்தன. தொடர்ந்து ஏற்பட்ட விபத்துகளால் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுமான வரைபடங்களின்படி துறைமுகம் அமைக்கப்படவில்லை. குறுகலான பாதையாக வடிவமைக்கப்பட்டதுடன், கடலின் உள்பகுதியில் இருக்க வேண்டிய கட்டுமானம் கரை பகுதியுடனே நிறைவடைகிறது. இதனால் அலைகள் எழும்பும்போது, மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு பலியாகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றத்தால் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு, நூற்றுக்கணக்கான படகுகள் சேதமடைந்துள்ளன.

துறைமுகத்தின் முகத்துவாரம் அகலமாகவும், கடலின் உட்பகுதிக்குள் சென்றடைவதாகவும் இருக்க வேண்டும். எனவே, குறுகலான கட்டுமானத்தை விரிவுபடுத்துவதுடன், ஆழப்படுத்தவும் வேண்டும். அதேபோல, துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் பலமுறை போராடியும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் மீனவர்கள் தேங்காப்பட்டினம் துறைமுகத்தை தவிர்த்து, கேரளம், குஜராத், கர்நாடகம், கோவா, அந்தமான் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அங்கு அவர்கள் அகதிகள்போல நடத்தப்படுகின்றனர். பிடித்து வரப்படும் மீன்கள் அந்த ஊர்களில் உள்ளவர்கள் கேட்கும் விலைக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால், போதிய வருவாய் கிடைப்பதில்லை.

இதையும் படிக்க- ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நாளை அனுமதி சீட்டு இல்லை

தேங்காப்பட்டினம் மீனவர்கள் பிரச்னையைக் தீர்க்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கமல்ஹாசன் நேரடியாக தேங்காப்பட்டினம் சென்று, துறைமுகப் பகுதியைப் பார்வையிட்டதுடன், மீனவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். உரிய தீர்வுகாண வேண்டுமென அரசுக்கும் வலியுறுத்தினார். ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகையும் இல்லை.

துறைமுக முகத்துவாரத்தில் பிரதான அலை தடுப்புச் சுவரை விரிவுபடுத்தினால்தான் மணல் குவியலைத் தடுத்து, விபத்துகளைத் தவிர்க்க முடியும். நட்சத்திர வடிவ கற்களைத் தவிர்த்து, சதுர வடிவ கற்களைப் பயன்படுத்தி முகத்துவாரம் அமைக்க வேண்டும்.  

அதேபோல, விபத்துகளில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்கள், படகுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  விபத்துகளின்போது மீனவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்க நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படவேண்டும்.

விபத்துகள் நேரிட்டு மீனவர்கள் பலியாகும்போது, போராட்டத்தில் ஈடுபடுவோரை சமாதானப்படுத்துவதற்காக தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதைத் தவிர்த்து,  இனியும் விபத்து நேரிடாத வகையில் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். கரையில் பிறந்து, கடலில் பிழைக்கும் மீனவர்களின் கண்ணீர் உப்புநீரில் கரைந்து கொண்டிருக்கிறது. அவர்களது வேதனைகளைப் போக்கி, கண்ணீரைத் துடைப்பதே அரசின் கடமை. மீனவர்களை வாக்கு வங்கிகளாக மட்டும் கருதும் போக்கைக் கைவிட்டு, அவர்களது உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT