தமிழ்நாடு

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க பிரமுகர் படுகொலை: 9 பேர் கைது

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்று வெளியில் வந்த முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளர் முன்விரோதம் காரணமாக புதன்கிழமை நள்ளிரவு கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடையதாக 20 பேர் கொண்ட கும்பல் தேடப்பட்டுவரும் நிலையில், அவர்களில் 9 பேரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை கொத்தத் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் கண்ணன்(31). ஆம்புலன்ஸ் வைத்துள்ளார்.  இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். 

இதுகுறித்து, கதிரவன் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கண்ணன் மீது ஏற்கெனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவிட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுதலை ஆகி ஊருக்கு வந்துள்ளார். 

இந்நிலையில், புதன்கிழமை இரவு 11.40 மணியளவில் கண்ணன் தனது நண்பர்களான நல்லத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்(19), டபீர் தெருவைச் சேர்ந்த திவாகர்(22) ஆகியோருடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளார். 

அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணன் உள்ளிட்ட மூவரையும் வழிமறித்த கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன், அஜித், திவாகர் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து, கண்ணனுடன் வந்த நண்பர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார், கண்ணனின் உடலை  கைப்பற்றி  உடல் கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து கதிரவன் உள்ளிட்ட 20 பேரை தேடிவந்தனர். 

இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கதிரவன், சேது, சந்தோஷ், ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரை, குணசேகரன், பிரபாகரன் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஞ்சிய நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இச்சம்பவத்தையடுத்து பதற்றத்தை தணிக்க மயிலாடுதுறை நகர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT