தமிழ்நாடு

பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூ. பொதுச் செயலர் டி.ராஜா

18th Aug 2022 04:00 AM

ADVERTISEMENT

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. மாநிலச் செயலர் அ.மு.சலீம் தலைமை வகித்தார்.
கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் அக்.14-ஆம் தேதி தொடங்கி அக்.18 வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் மாநாடு நடைபெற்று வருகிறது. நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
பன்முக நெருக்கடிகள்: மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளால், இன்றைய நிலையில் நமது நாடு அரசியல், பொருளாதாரம், சமூகம் என பன்முக நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக இவர்கள் போராடியதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். காந்தி, நேரு, பகத்சிங் போன்ற தலைவர்களும், எண்ணற்ற இடதுசாரிகளும்தான் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள்.
பாஜக ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைந்துள்ளது. நமது இந்திய அரசு, மதச் சார்பற்றும், கூட்டாட்சியுடனும், அனைத்து மக்களின் நலனைபேணுவதாகவும் இருக்க வேண்டுமென அரசியலமைப்புச் சட்டம் எடுத்துரைக்கிறது. ஆனால், மத்திய அரசு சமூக நல்லிணக்கத்தை துளைத்து சாதி, மத மோதல்களை உருவாக்கி வருகிறது. நமது நாட்டில் இந்துராஷ்டிரம் அமைந்தால் பேரிடர் என அம்பேத்கர் சொன்னதை, இப்போது செயல்படுத்துகின்றனர்.
செல்வந்தர்களுக்கு துணை நிற்கிறது: சாதிய ஆதிக்கத்தில் ராஜஸ்தானில் பழங்குடியின சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொடுமை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலில், இதுபோன்ற சனாதனக் கொள்கையை பாஜக தூக்கிப்பிடிக்கிறது. நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினிச் சாவில் முன்னிலை என்ற நிலைக்கு நாடு செல்கிறது. ஆனால், மத்திய அரசு செல்வந்தர்களுக்கு துணை நிற்கிறது.
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, கருப்புப் பணம் மீட்பு, மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துதல் போன்ற பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒன்றுபட வேண்டும்: பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஒற்றை ஆட்சியை கொண்டுவர முயல்கின்றனர். இந்தச் சூழலில் நாடு, ஜனநாயகம், கூட்டாட்சி நெறிமுறைகள், அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை காப்பாற்ற, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இடதுசாரிகள் வலிமை பெற வேண்டும்.
பிகாரில், பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு நிதீஷ்குமார் வெளியேறி ஆட்சியமைத்தது நாடு முழுவதும் எழுச்சியை உருவாக்கியது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. ஆளுநர் மூலம், மாநில அரசைப் புறக்கணித்து, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது. அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, அந்தக் கட்சியின் இரு பிரிவினரும் யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் அ.ராமமூர்த்தி, புதுவை முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன், மாநில துணைச் செயலர்கள் து.கீதநாதன், வி.எஸ்.அபிஷேகம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ந.தனராமன், அ.அப்துல் ரஷீத், நிர்வாகக் குழு உறுப்பினர் கே.சேதுசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலர் சோ.பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாடு இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் (ஆக.18) நடைபெறுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT