தமிழ்நாடு

நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுகவில் செல்லாமல்போன புதிய பதவிகள்

18th Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரின் புதிய பதவிகள் செல்லாததாகியுள்ளன.
அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமியின் ஏற்பாட்டின் பேரில் ஜூலை 11-இல் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுக்குழுவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார்.
அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார். அதிமுகவின் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை நீக்கி, அந்தப் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை அறிவித்தார். இது தொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கடிதமும் கொடுக்கப்பட்டது. வேறு சிலருக்கும் பல்வேறு பதவிகளை வழங்கினார்.
அதேபோல, எடப்பாடி பழனிசாமி உள்பட அவரது ஆதரவாளர்கள் பலரை ஓ.பன்னீர்செல்வமும் கட்சியிலிருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியது செல்லாது என்றும், பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துதான் கூட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
ஜூலை 11 மற்றும் ஜூன் 23-இல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்களுக்கு முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாததாகி உள்ளது.
அவர் பிறருக்கு வழங்கிய பதவிகளும், ஓ.பன்னீர்செல்வம் பிறருக்கு வழங்கிய பதவிகளும் செல்லாததாகி உள்ளன. அதைப்போல அவர்கள் பலரை நீக்கி அறிவித்துள்ளதும் செல்லாததாகி உள்ளது.
தற்போதைய நிலையில் முன்பிருந்தது போலவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவர். பொருளாளர் பதவியையும் ஓ.பன்னீர்செல்வமே வகிப்பார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT