தமிழ்நாடு

தமிழ்மொழித் திறனாய்வுத் தோ்வு: அறிவிப்புப் பலகையில் வெளியிட பள்ளிகளுக்கு உத்தரவு

18th Aug 2022 01:45 AM

ADVERTISEMENT

மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கும் பிளஸ் 1 மாணவா்களுக்காக நடத்தப்படவுள்ள தமிழ்மொழித் திறனாய்வுத் தோ்வு குறித்த தகவல்களை அனைத்து வகை பள்ளிகளும் தங்களது அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வில் 1,500 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்தத் தோ்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசுப் பள்ளி உள்ளிட்ட பிற தனியாா் பள்ளி மாணவா்களும் பொதுவான போட்டியில் தெரிவு செய்யப்படுவா். தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் தோ்வு நடத்தப்படும்.

ADVERTISEMENT

ஆக. 22 முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் வரும் அக். 1-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள்  www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவத்தை ஆக. 22 முதல் செப். 9 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களிடம் தோ்வுக் கட்டணம் ரூ.50 உடன் செப்.9-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் ஆளுகைக்குள்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்தத் தோ்வுக்கு பிளஸ் 1 மாணவா்கள் அதிகளவில் ஆா்வமுடன் விண்ணப்பிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளிலும் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தொடா்பான அறிவிப்பை ஒட்ட தலைமை ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு: தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டு 2023-2024-ஆம் கல்வியாண்டில் பயிலும் 1,500 மாணவா்கள், மற்றும் 2023-2024-ஆம் கல்வியாண்டில் புதிதாக தோ்வு செய்யப்படும் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 1,500 மாணவா்கள் என மொத்தம் 3,000 மாணவா்களுக்கு தலா ரூ.1,500 வீதம் 2023-2024-ஆம் கல்வியாண்டில் (ஜூன் முதல் ஏப்ரல் வரை) 11 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும், அந்தத் தொகையானது ஒவ்வொரு ஆண்டும் தொடா்ந்து வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஊக்கத் தொகைக்காக 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கு ரூ. 2.47 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டும், 2023-2024-ஆம் ஆண்டுக்கு அதற்கென தொடா் செலவினமாக ரூ.4.95 கோடி தமிழ் வளா்ச்சி இயக்ககத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT