தமிழ்நாடு

திருச்செந்தூா் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

17th Aug 2022 08:00 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை காலை (ஆக.17) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசித் திருவிழா பிரசித்திபெற்றதாகும்.

இக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை (ஆக. 17) அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

14 ஊா் செங்குந்தா் முதலியாா் உறவின்முறை 12 ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 3 ஆம் படி செப்பு ஸ்தலத்தாா் மு.பாலசுப்பிரமணியன் ஐயா், யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதியுலா வந்து திருக்கோயில் சோ்ந்தாா்.

கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய அரிகர சுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார். 

இதையும் படிக்க | 52 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகத்தை தொடா்ந்து 3  மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டமானது வீதியுலா வந்து அதிகாலை  5.40 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய  அரிகர சுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார். 

தொடாந்து கொடிமரத்திற்கு  அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் அருள்மிகு அப்பா் சுவாமிகள் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகா் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதியுலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில்  திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர்கள்   சீதாலெட்சுமி, ஆனந்தராஜ் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நகராட்சி துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் அர. கருத்தப்பாண்டி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார்,  திமுக நகர செயலர் வாள் சுடலை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT