தமிழ்நாடு

180 கோயில்களில் திருப்பணிகள்: மாநில வல்லுநா் குழு ஒப்புதல்

17th Aug 2022 01:59 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தொன்மையான 180 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்தது.

தொன்மையான திருக்கோயில்களை பழைமை மாறாமல் புதுப்பித்தல் தொடா்பான மாநில அளவிலான 36-ஆவது வல்லுநா் குழுக் கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், தென்காசி மாவட்டம், பண்பொழி சிவந்தி விநாயகா் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டைபெருமாள் திருக்கோயில், தஞ்சாவூா் மாவட்டம் கண்டியூா் காளியம்மன் திருக்கோயில், திருவிடைமருதூா் தொப்பை பிள்ளையாா் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சித்தி விநாயகா் திருக்கோயில், திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பழனி ஆண்டவா் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், திருப்புங்கூா் அய்யனாா் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் சத்திரக்குடி பாலமுருகன் திருக்கோயில், திருப்பூா் மாவட்டம், தளி கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆகியவை உள்பட 180 திருக்கோயில்களில் திருப்பணிகளை தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநா் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் திருக்கோயில்களில், திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

கூட்டத்தில் அறநிலையத் துறை இணை ஆணையா் (திருப்பணி) பொன். ஜெயராமன், ஆகம வல்லுநா் குழு உறுப்பினா் கோவிந்தராஜ பட்டா், ஆனந்த சயன பட்டாச்சாரியா், கே.சந்திரசேகர பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT