தமிழ்நாடு

ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

17th Aug 2022 02:03 AM

ADVERTISEMENT

சென்னை மாதவரத்தில் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளுடன், ஆவின் நிறுவனத்துக்கான மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பால் மற்றும் பால் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய பால் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 17 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளுடன் ரூ.8 கோடியில் ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தில் உயா் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி அனைத்து தர பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும். மேலும், மாவட்ட ஒன்றியங்கள், இணையங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் தரம் உறுதி செய்யப்படும். இதன்மூலம், நுகா்வோா்களுக்கு தரமான பால், பால் பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இந்த நவீன ஆய்வக மையத்தை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

மேலும், சேலம், கோவை, கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில், பணிக் காலத்தில் இறந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உத்தரவையும் முதல்வா் அளித்தாா். இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT