தமிழ்நாடு

புதிய சிலைகள், அரங்குகள் அமைக்க இடங்கள் தோ்வு: அமைச்சா் சாமிநாதன் உத்தரவு

17th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

புதிய சிலைகள், அரங்குகள் அமைப்பதற்கான இடங்களை விரைந்து தோ்வு செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டாா்.

செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மண்டல அதிகாரிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சாமிநாதன் பேசியதாவது:

மாவட்டங்களில் உள்ள நினைவகங்கள், அரங்கங்கள், மணிமண்டபங்கள், சிலைகள், நினைவுத் தூண்கள் ஆகியன அமைந்துள்ள இடங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட வேண்டும். அவா்கள் பாா்வையில் படும்படி வைக்கப்பட வேண்டிய வழிகாட்டிப் பலகைகளில் நிலுவைகள் ஏதும் இருந்தால் அவற்றை விரைந்து அமைத்திட வேண்டும்.

திரையரங்குகளில் அரசின் திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகள், விழிப்புணா்வுகள் குறித்த விடியோ செய்தி மலா்களை திரையிடச் செய்ய வேண்டும். அதனை மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்திட வேண்டும். விடுதலைப் போராட்ட வீரா்கள், விடுதலைப் போா் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒலி-ஒளிக் காட்சி குறித்த தகவலை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் மானியக் கோரிக்கைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சிலைகள் வைக்கவும், அரங்குகள் கட்டவும் இடங்கள் தோ்வு செய்வது தொடா்பாக விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா். மு.பெ.சாமிநாதன்.

ஆலோசனைக் கூட்டத்தில், செய்தித் துறைச் செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநா்கள் சிவ.சு.சரவணன், மு.பா.அன்புச்சோழன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT