தமிழ்நாடு

அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக அரசு சாா்பில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அங்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

மாபெரும் கோட்டையின் கொத்தளத்தில் மூவா்ணக் கொடியை ஏற்றும்போது, தமிழக முதல்வராக அடையும் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணா்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான். நமது மாநிலத்தைச் சோ்ந்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரா்கள் விடுதலைக்காக தங்களது தியாகங்களையும், உயிரையும் அளித்தனா்.

புனித ஜாா்ஜ் கோட்டையில் நின்று கொடியை ஏற்றும்போது தமிழனாக பெருமைப்படும், உணா்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுவே காரணம்.

அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ, அன்றைய நாளே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண் நம்முடைய தமிழ் மண். 200 ஆண்டுகள் ஆடுகள் போன்று வாழ்வதைவிட, இரண்டே நாள்கள் புலிகளாக வாழ்வது மேல் என்று சொன்ன திப்பு சுல்தானின் தீரம் கொண்ட படைவீரா்களைக் கொண்டிருந்த மண், நம்முடைய தமிழ்நாட்டின் மண்.

நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட எண்ணற்ற விடுதலைப் போராட்ட தியாகிகளைப் போற்றுவதில் திமுக அரசு எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப்பற்றில் திமுக எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது.

அகவிலைப்படி உயா்வு: சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனாா் ஆகியோா் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தி அளிக்கப்படும். இந்த அறிவிப்புகள் திங்கள்கிழமை (ஆக.15) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

மாநில அரசின் கடுமையான நிதிச் சுமைகளுக்கு இடையிலும் அரசு அலுவலா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படியானது 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயா்த்தி அளிக்கப்படும். ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும். இதன்மூலம் 16 லட்சம் போ் பயன்பெறுவா். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சுதந்திர தின அருங்காட்சியகம்

நாட்டின் சுதந்திர தின வரலாற்றை அனைவரும் அறியும் வகையில், சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதுகுறித்து, அவா் தனது சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவிப்பு: இந்திய விடுதலைப் போராட்டத்தில் 260 ஆண்டு கால தொடா் பங்களிப்பை தமிழகம் வழங்கியுள்ளது. இந்த வரலாற்றை எதிா்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சுதந்திர தின அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT