தமிழ்நாடு

காமன்வெல்த் போட்டியில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்வர் வழங்கினார்

16th Aug 2022 03:59 PM

ADVERTISEMENT

இங்கிலாந்தில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

22-வது காமன்வெல்த் போட்டி மற்றும் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் 75வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக  மொத்தம் ரூ.4.31 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் இன்று வழங்கினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (16.08.2022) தலைமைச் செயலகத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து வீரர்கள் ஏ. சரத்கமல் மற்றும்ஜி. சத்தியன், ஸ்குவாஷ் வீரர்கள் சவ்ரவ் கோஷல், தீபிகா பல்லிக்கல் மற்றும் பயிற்றுநர்கள் 5 நபர்கள்,  லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற பவானி தேவி  மற்றும் இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக  மொத்தம் 4 கோடியே 31 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

ADVERTISEMENT

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. 

இதையும் படிக்க |  காமன்வெல்த்: 200-ஐக் கடந்தது இந்தியாவின் தங்கக் கணக்கு

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தில் (Elite Sportsperson Scheme)  ஏ.சரத்கமல், சத்தியன், பவானி தேவி ஆகியோருக்கும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (Mission International Medals Scheme)  சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் தொடர் பயிற்சி உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், கடந்த 28.7.2022 முதல் 8.8.2022 வரை இங்கிலாந்து நாட்டின், பர்மிங்காமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ. சரத்கமலுக்கு மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டி,  கலப்பு இரட்டையர் போட்டி,  ஒற்றையர் போட்டிகளில் 3 தங்கம் மற்றும்  இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி, என மொத்தம் 4  பதக்கங்களை வென்றதற்காக உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடியே 80 இலட்சம் ரூபாயும்,

மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டியில் 1 தங்கம், இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி மற்றும் ஒற்றையர் போட்டியில் 1 வெண்கலம், என மொத்தம் 3 பதக்கங்களை வென்றதற்காக ஜி. சத்தியனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாயும்,

ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக்கு உயரிய ஊக்கத்தொகையாக  40 இலட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல்-க்கு - உயரிய ஊக்கத்தொகையாக 20 இலட்சம் ரூபாயும் மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 5 நபர்களுக்கு  மொத்த ஊக்கத்தொகையாக 51 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 91 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார்.

இதையும் படிக்க | காமன்வெல்த் வெற்றி வீரா்களுக்கு பிரதமா் மோடி வரவேற்பு

மேலும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் பெண்கள் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக 35  இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷ்-க்கு ஊக்கத்தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதல்வர் வழங்கி வாழ்த்தினார். 

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்,  தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப.,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மரு. கா. ப. கார்த்திகேயன், இ.ஆ.ப.  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT