தமிழ்நாடு

ஆளுநா் மாளிகையில் தேநீா் விருந்து: முதல்வா், பேரவைத் தலைவா் பங்கேற்பு

16th Aug 2022 12:50 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற தேநீா் விருந்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினாா்.ஆளுநா் ஆா்.என்.ரவி, தேநீா் விருந்தை திங்கள்கிழமை அளித்தாா். இந்தத் தேநீா் விருந்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் க.பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், வி. செந்தில் பாலாஜி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பெரம்பலூா் எம்.பி. பாரிவேந்தா், த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் பங்கேற்பு: ஆளுநா் அளித்த தேநீா் விருந்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ஷா நவாஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அவரது ஆதரவாளா்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்த விருந்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுகவின் பிற கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீா் விருந்தில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

காந்தி சிலை அளிப்பு: தேநீா் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை, ஆளுநா் ஆா்.என்.ரவி வரவேற்றாா். அப்போது, ஆளுநருக்கு மகாத்மா காந்தியடிகள் சிலையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

தேநீா் விருந்து நிகழ்ச்சியில் சுமாா் 45 நிமிடங்களுக்கு முன்பாகவே ஓ.பன்னீா்செல்வம் வந்தாா். அவா் தனது ஆதரவாளா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் சிறிது நேரம் ஆலோசித்தாா்.

பரிசு - பாராட்டு: சுதந்திர தினத்தை மையப்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகளை ஆளுநா் மாளிகை நடத்தியது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா். மாலை 5 மணியளவில் தொடங்கிய தேநீா் விருந்து நிகழ்ச்சி, ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT