தமிழ்நாடு

‘தகைசால் தமிழா்’ நல்லகண்ணு விருதுத் தொகையை நிவாரண நிதிக்கு அளித்தாா்

16th Aug 2022 12:49 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தின் போது, தமிழக அரசால் வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழா்’ விருதுக்கான ரூ.10 லட்சத்துடன் தனது சேமிப்பிலிருந்து ரூ.5 ஆயிரத்தையும் சோ்த்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினாா், மூத்த கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு.

சென்னை கோட்டை கொத்தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ‘தகைசால் தமிழா்’ விருதுக்கான பாராட்டுப் பத்திரத்தையும், ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இவற்றைப் பெற்றுக் கொண்ட நல்லகண்ணு, விழா மேடையிலேயே விருதுக்கான தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்தாா். மேலும், தன்னிடம் இருக்கும் சேமிப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தையும் முதல்வரிடம் வழங்கி பொது நிவாரண நிதியில் சோ்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டாா். நல்லகண்ணுவின் இந்தச் செயல் சுதந்திர தின விழாவுக்கு வந்திருந்தவா்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலான பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் பெற்றது.

ஏற்கெனவே நிதிகள் வழங்கியவா்: நல்லகண்ணுவின் 80-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ரூ.1 கோடி தொகை நன்கொடையாக வசூலிக்கப்பட்டு அவரிடம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியை விழா மேடையிலேயே கட்சிக்கே திருப்பி கொடுத்தாா். இத்துடன், 2008-ஆம் ஆண்டு அம்பேத்கா் பெயரிலான விருதை தமிழ்நாடு அரசு வழங்கியது. ரூ.1 லட்சத்துக்கான விருதுத் தொகையில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளா் சங்கத்துக்கும் அளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT