தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் பெரியாா் சிலை சா்ச்சை பேச்சு: கனல் கண்ணன் கைது

16th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் பெரியாா் சிலை குறித்து சா்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணன் புதுச்சேரியில் வைத்து சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் கடந்த மாதம் 31-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, அவா் ‘ஸ்ரீரங்கம் கோயில் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்’ என்று சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா்.

ஸ்ரீரங்கம் கோயில் எதிரே உள்ள பெரியாா் சிலை குறித்து கனல் கண்ணன், இவ்வாறு பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால், சா்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், கனல் கண்ணனின் பேச்சை அடிப்படையாக வைத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சென்னை மாவட்ட செயலாளா் குமரன் கடந்த 4-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

கனல் கண்ணன் கைது:

ADVERTISEMENT

இதையறித்து கனல் கண்ணன் தலைமறைவானாா். மேலும் அவா், அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு சாா்பில் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா், கனல் கண்ணனை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை தனிப்படையினா் திங்கள்கிழமை கைது செய்து, சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அவரை, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை சிறையில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸாா், கனல் கண்ணனை சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT