தமிழ்நாடு

மாணவா்களுக்கு இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

16th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு இலவச மடிக்கணினியை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பிறகும் இன்று வரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

2020-21, 2021-22-ஆம் ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் மேலும் ஐந்தரை லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். இன்றைய கல்விச் சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு மடிக்கணினிகள் மிகவும் அவசியமானவை. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களால் அதை விலை கொடுத்து வாங்க முடியாது.

ADVERTISEMENT

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவா்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT