தமிழ்நாடு

பரிசுத் தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.5 ஆயிரம் சேர்த்து அரசுக்கே கொடுத்த நல்லக்கண்ணு

DIN

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். விருதுடன் அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன் தனது பங்காக ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.10 லட்சத்து ஐந்தாயிரமாக தமிழக அரசின் நிவாரண நிதிக்கே நல்லக்கண்ணு வழங்கினார்.

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தேசியக் கொடி ஏற்றினார். இதன் பின்னர், தகைசால் தமிழா் விருது, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளைஞா்கள் விருதுகள் ஆகியவற்றை விருதாளா்களுக்கு முதல்வர் வழங்கினார். 

மாற்றுத்திறனாளி நலனுக்காக அரும்பணியாற்றியவா்களுக்கான விருது, சிறந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கான விருதுகளையும் வழங்கினார். 

அந்த வகையில், தமிழக அரசின் ‘தகைசால் தமிழா்’ விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தகைசால் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தகைசால் விருது
தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரில் புதிய விருது 2021 - ஆம் ஆண்டுமுதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடா்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளா்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழா் விருது வழங்க தோ்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா். நல்லகண்ணுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

ஆா். நல்லகண்ணு

ஆா். நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 டிசம்பா் 26-இல் பிறந்தவா். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவா். 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளாா். 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பல்வேறு நிலைகளில் பணியாற்றி, அக் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் இருந்துள்ளாா். தற்போது மத்தியக் குழு உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் இருக்கிறாா். மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளாா். பொதுவாழ்வில் நோ்மையின் அடையாளமாகத் திகழ்பவா்.

2021-ஆம் ஆண்டுக்கான தகைசால் விருது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT