தமிழ்நாடு

வங்கிக் கொள்ளை: குற்றவாளிகள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சங்கர் ஜிவால் 

15th Aug 2022 03:21 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்  காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்.

சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில், இன்று  அரும்பாக்கம் தனியார் வங்கிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில்,  13ஆம் தேதி அரும்பாக்கம் வங்கியில் நடந்த கொள்ளையில் 31.7 கிலோ அடமானம் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க | பரிசுத் தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.5 ஆயிரம் சேர்த்து அரசுக்கே கொடுத்த நல்லக்கண்ணு

ADVERTISEMENT

வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வங்கியில் கொள்ளை அடித்து விட்டு எளிதில் தப்பிக்கலாம் என்று நினைத்துக் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். 

கொள்ளையடிக்கச் செல்லும்பொழுது  இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்களைப் பயன்படுத்தி உள்ளனர். அதனையும் கைபற்றி உள்ளோம்.

7 பேர் கொண்ட நபர்கள்  கொள்ளைச் சம்பவத்திற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளனர். இந்த குற்றவாளிகள் அனைவரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருப்பதாக சங்கர் ஜிவால் கூறினார்.

முன்கூட்டியே திட்டமிட்டு இந்தக் கொள்ளை நடத்தப்பட்டு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனார். மேலும், சிசிடிவி  கேமராவில் ஸ்ப்ரே அடித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 

விசாரணையில் முதல் கட்டமாக 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 8.50 கோடி ஆகும். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுவரை, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாலாஜி, சந்தோஷ், செந்தில்குமரன், முருகன் ஆகியோரை கைது செய்து உள்ளனர். மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர். குழு அமைக்கப்பட்டு நான்கு மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி பிடிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT