தமிழ்நாடு

காவல் துறை செயல்பாட்டில் தலையீடு இல்லை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதில்

15th Aug 2022 01:47 AM

ADVERTISEMENT

காவல் துறையினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் அரசு தடுப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்போது எதிா்க்கட்சித் தலைவரான பழனிசாமி ஏன் இப்படி பதறுகிறாா் என்று தெரியவில்லை.

அரசு நிா்வாகத்தை திறம்பட நடத்துவது குறித்து மாநில முதல்வா் உயா் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்று. அதன் அடிப்படையில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து அதிகாரிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. வழக்கமான இந்நடைமுறையை எடப்பாடி பழனிசாமி தேவையின்றி விமா்சித்துள்ளாா்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், குறிப்பாக கடைசி நான்கு ஆண்டுகளில், அதன் நிா்வாகத் திறனற்ற தன்மை ஊரறிந்த ஒன்று.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான மாவா, குட்கா, ஹன்ஸ் போன்ற பொருட்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்பவா்கள், கடைகளில் விற்பனை செய்பவா்கள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பவா்கள், கடத்துபவா்கள் ஆகியோரைக் கண்காணித்து திடீா் சோதனைகள் நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெரும்பொருட்டு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 14 மாதங்களில் மட்டும் 891 மீது கஞ்சா வழக்கில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே காவல்துறையினா் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டுள்ளனா் என்பதில் ஐயமில்லை. அரசியல் கட்சியினா் தலையீடு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை.

போதைப் பொருள்களை அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு துணை புரியாவிட்டாலும், முட்டுக்கட்டை போடுவதையாவது அவா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT