தமிழ்நாடு

சென்னையில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை: முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்

14th Aug 2022 02:54 PM

ADVERTISEMENT

சென்னையில் காந்தியடிகளின் திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை 15.08.2022 அன்று காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க உள்ளார். காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75வது சுதந்திரத் திருநாள் – அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையானது முதல்வரால் திறக்கப்படவுள்ளது. இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தேசத் தந்தை, மகாத்மா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம், போர்பந்தர் என்னும் ஊரில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி – புத்லிபாய் தம்பதியருக்கு 02.10.1869 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 

இவரது மனைவி கஸ்தூரிபாய் ஆவார். தனது 18 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கறிஞர் பணி மேற்கொண்டு, பின்னர் பணி நிமித்தமாக தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்கா நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் இருப்பதைக் கண்டு வேதனை அடைந்தார். தென்னாப்பிரிக்கா மக்களின் உரிமைக்காகப் போராடிய அண்ணல் காந்தியடிகள், இந்தியா திரும்பியவுடன் ஆங்கிலேயர்களின் ஆதிக்க சக்திக்கு அடிமைப்பட்டு இருப்பதை பார்த்து, இந்திய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தரவேண்டும் என்று உறுதி பூண்டார். ஆயுதம் ஏந்திப் போராடுவதைவிட, அறவழியாம் அகிம்சை வழியில் சாதிக்க முடியும் என்று உலகில் உள்ள அனைவருக்கும் உணர்த்திக் காட்டியவர் நமது காந்தியடிகள்.

இதையும் படிக்க- காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ADVERTISEMENT

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களும், கலவரங்களும் நிகழ்வதைக் கண்டு வேதனை அடைந்த அண்ணல் காந்தியடிகள். நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் அயராது முயற்சியில் தன்னையே அர்பணித்து வந்தார். அண்ணல் காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு ஆகிய முக்கியமான போராட்டங்கள், இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது. சுதேசி இயக்கம், தீண்டாமை, மது விலக்கு இவற்றையே தனது லட்சியமாக கொண்டிருந்தார் அண்ணல் காந்தியடிகள். மேலும், சத்தியம், அகிம்சை இவை இரண்டையும் தன் இரு கண்கள் போல போற்றி, தம் வாழ்நாள் இறுதி வரை கடைபிடித்து வந்தார். குஜராத்தில் பிறந்து, இந்திய மொழிகள் பல கற்றறிந்தாலும், தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் அண்ணல் காந்தியடிகள் அளவற்ற அன்பும், நேசமும் கொண்டிருந்தார்.

அகிம்சை வழியில் வெள்ளையர்களை வெளியேற்ற, புதிய பாதை காட்டிய அண்ணல் காந்தியடிகள் 1896 முதல் 1946 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு 12 முறை வருகை புரிந்துள்ளார். மதுரை மாநகருக்கு 1921 செப்டம்பர் 22 ஆம் ஆண்டு வருகை புரிந்த போது மக்கள் உடுக்க போதிய உடை இன்றி துன்பமடைவதைக் கண்டு வேதனை அடைந்தார். தன்னுடைய வழக்கமான உடையைத் துறந்து, விவசாயிகள் அணியும் வேட்டி, துண்டுக்கு தன்னை மாற்றிக் கொண்டதோடு, மேலாடை அணிவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்த்தார். நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தமர் காந்தியடிகள் 30.01.1948 அன்று அகால மரணத்தைத் தழுவினார். 1949ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அண்ணல் காந்திகடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டு அதன் நினைவாக அமைக்கப்பட்ட காந்தி மண்டபம் 30.05.1956 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அண்ணலுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் காந்தி மண்டப வளாகம் 27.01.1956 அன்றும், இவ்வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் அருங்காட்சியகமும் 02.10.1979 அன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT