தமிழ்நாடு

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

14th Aug 2022 02:27 PM

ADVERTISEMENT

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாகவும் தொடர்ந்து கூறி வந்தேன். மேலும், காவல் துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்தி வந்தேன். ஆனால், தொடர்ந்து காவல் துறையை சட்டப்படி நடக்க அனுமதிக்காமல், தங்களின் ஏவல் துறையாகவே இந்த திமுக அரசு பயன்படுத்தி வருகிறது.

நேற்று பகல் சுமார் 2.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல், சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உள்ளே நுழைந்து, காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு வங்கியினுள் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்ற செய்தி தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதையும் படிக்க- ஆக.17-ல் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ADVERTISEMENT

சென்னை மாநகரில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகளையும், உண்மையான கொள்ளையர்களையும் காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. எனவே, இனியாவது இந்த திமுக அரசின் முதல்வர், தமிழகக் காவல் துறையினை சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT