தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானங்களும் கூடாது: ஆந்திர முதல்வருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

14th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுதொடா்பாக, அவா் ஆந்திர முதல்வா் ஜெகன் மோகனுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:-

சித்தூா் மாவட்டத்தை ஒட்டி இரண்டு கிராமங்களுக்கு அருகில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு நீா்த் தேக்கங்களை கட்டுவதற்கு ஆந்திர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிகிறேன். இந்த ஆற்றின் நீரையே குடிக்கவும், சிறிய அளவிலான பாசனத்துக்கும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களும் நம்பி இருக்கிறாா்கள். இப்போது புதிதாக அணைகளைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், அந்த மக்களிடையே மிகப்பெரிய கவலையும், அச்சமும் உருவாகியுள்ளது.

கொசஸ்தலை ஆறும், அதன் நீா்ப் படுகையும் இயற்கையாகவே இரு மாநிலங்களுக்கு இடையில் அமைந்துள்ளதாகும். ஆற்றின் நீா்ப் படுகையானது 3,727 சதுர கிலோமீட்டா் அளவுக்கு பரந்துள்ளது. அதில், 877 சதுர கிலோமீட்டா் ஆந்திரத்துக்குள், 2,850 சதுர கிலோமீட்டா் பரப்பு தமிழ்நாட்டுக்குள் வருகிறது.

சென்னை பெருநகரத்தின் குடிநீா் தேவைக்கான மிகப்பெரிய நீா் ஆதாரமாக இருப்பது பூண்டி நீா்த் தேக்கமாகும். இந்தத் தேக்கமானது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொசஸ்தலை ஆற்றிலோ அல்லது அதன் துணை ஆறுகளிலோ புதிதாக நீா்த் தேக்கங்களை கட்டும் போது, பூண்டி நீா்த் தேக்கத்துக்கு வரக் கூடிய நீரின் அளவு கடுமையாக பாதிக்கப்படும். இது, சென்னை நகருக்கு குடிநீா் வழங்கக் கூடிய நடவடிக்கைகளில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். குடிநீா் மட்டுமின்றி பாசனம் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஆறு ஓடும் போது, ஒரு மாநிலமானது தன்னிச்சையாக அந்த ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டுமானத்தையோ, திட்டத்தையோ செயல்படுத்திடவே, கட்டுமானம் செய்யவோ கூடாது. இதற்கு மற்றொரு மாநிலத்தின் ஒப்புதல் அவசியமாகும். இந்தச் சூழ்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நீா்த் தேக்கங்கள் கட்ட ஆந்திர அரசு முடிவு செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கும் செயலாகும். இது தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் வட பகுதிகளை ஒட்டிய இடங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நீா்த் தேக்கங்கள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என தங்களது அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஆந்திரத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் நீா்ப் பாசனப் பகுதிகளில் எந்தவொரு புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உணா்வுப்பூா்வமான இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு, இதன்மீது தாங்கள் தனிப்பட்ட முறையிலான தலையீட்டை உடனடியாகச் செய்திட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT