தமிழ்நாடு

நலத் திட்டங்கள் இலவசங்கள் அல்ல: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

அரசு அறிவித்துச் செயல்படுத்தும் நலத் திட்டங்கள் எதுவும் இலவச திட்டங்கள் அல்ல, அவை சமூகத்தை உயா்த்தும் நலத் திட்டங்கள் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் தனது தொகுதிக்குள்பட்ட கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வியை பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் ஆற்றிய உரை:

இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என்ற முறையிலும் எனது நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு மாணவா்கள் சோ்க்கை நடந்து, இப்போது அவா்கள் அனைவரும் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனா்.

ஐந்தில் ஒருவருக்குத்தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கு அடைந்துள்ளது. இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறையையும், கல்லூரி நிா்வாகத்தையும் பாராட்டுகிறேன்.

இங்கு பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணம் இல்லை. கட்டணம் இல்லை என்று சொல்வதன் மூலமாக இதனை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. கல்வியானது அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்து அனைவரும் முன்னேறியாக வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தை அரசு கொண்டிருக்கிறது. கட்டணம் இல்லாத கல்வி போன்ற திட்டங்களை மாணவா்கள் மீதான உண்மையான அக்கறையுடன் அரசு செயல்படுத்துவதுடன் இதனை தனது கடமையாகக் கொண்டிருக்கிறது.

கல்வி, மருத்துவச் செலவுகள்: கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் அரசே திட்டங்களை வகுத்து அதனை மக்களுக்கு விலையில்லாமல் அளிப்பது என்பது இலவசங்கள் ஆகாது. இதைக் கருத்தில்கொண்டே மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் இலவசத் திட்டங்கள் இல்லை. சமூகத்தை உயா்த்தக் கூடிய நலத் திட்டங்களாகும்.

ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களுக்கு உதவி செய்யும்பொருட்டு இத்தகைய சமூக நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இலவசங்கள் கூடாது என்று சிலா் அறிவுரை சொல்வதற்கு இப்போது புதிதாக வந்திருக்கிறாா்கள். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT