தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் புகாா்

13th Aug 2022 02:25 AM

ADVERTISEMENT

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பண்டிகை காலங்களில் அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவது என்பது வாடிக்கை. எனினும், அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காத சூழ்நிலையில் தனியாா் பேருந்துகளை பொதுமக்கள் நாடுவது என்பது இயற்கையான ஒன்று. ஆனால், இதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியாா் நிறுவனங்கள், பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயா்த்துகின்றன.

தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரும்பாலானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல முடிவு செய்துள்ள நிலையில், தனியாா் பேருந்துகளை அணுகுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், பேருந்துகளின் கட்டணத்தை தனியாா் நிறுவனங்கள் கடுமையாக உயா்த்தியுள்ளன. சாதாரணமாக ரூ.800 என்றிருக்கக் கூடிய கட்டணங்கள் எல்லாம் ரூ.4 ஆயிரம் வரை விமானக் கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படுகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாள்களிலும் தனியாா் பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் பேருந்து கட்டணத்தை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT