தமிழ்நாடு

மத்திய அரசைக் கண்டித்து ஆக.30-ல் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்: இந்தியக் கம்யூ. அறிவிப்பு

13th Aug 2022 06:19 PM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து ஆக.30-ஆம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மத்திய அரசு விலைவாசி நிலவரத்தை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண சாலையோரக் கடைகளில் விற்கப்படும் இட்லி விலை 7 ரூபாயிலிருந்து 12 ரூபாய் என அதிகரித்துள்ளது. உயர்தர உணவகங்களில் விலையுடன் சேர்த்து ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. அண்மையில் அரிசி மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிக்கிறது. ஈமசடங்கு செய்யும் மயானச் செலவின் மீதும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. ஒன்றிய அரசு மருந்து பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்தியது.
பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து நாள்தோறும் உயர்த்தி வருவதன் மூலம் 2014 ஆம் ஆண்டிலிருந்து, இதுவரை மக்கள் கையிலிருந்து 27 லட்சம் கோடி ரூபாய் எடுத்துள்ளது. வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் வாழ்க்கை தரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலையிழப்பும், வருமானக் குறைவும் மக்கள் வாழ்வை தாக்கியிருக்கும் நிலையிலும், அம்பானி, அதானி குழும நிறுவனங்கள் பெரும் செல்வக்குவிப்பை பெற்றுள்ளன. விலைவாசி நிலவரத்தை சீராக நிலை நிறுத்தி, மக்கள் வாழ்க்கை தரத்தை பாதுகாப்பதில், மோடியின் பாஜக மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

இதையும் படிக்க- சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி

மறுபக்கம் மின்சார சட்ட திருத்த மசோதவை நிறைவேற்றி, மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழி செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரம் உள்பட மின் கட்டண மானியங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை போன்ற மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து, அவைகளை கைவிட வலியுறுத்தியும், குடும்பங்களின் வாழ்க்கை நெருக்கடி கழுத்தை முறிக்கும் சுமையாகி இருக்கும் போது, தமிழ்நாடு அரசு வீட்டு வரி, சொத்துவரி, மின்கட்டணங்கள் போன்றவற்றை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்து, வரி உயர்வுகளை ரத்த செய்ய வேண்டும் எனக் கோரியும் வரும் 30.08.2022 ஆம் தேதி செவ்வாய் கிழமை தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என திருப்பூரில் ஆகஸ்ட் 6 முதல் 9 வரை நடைபெற்ற கட்சியின் மாநில 25வது மாநாடு தீர்மானித்துள்ளது.
மாநாட்டு தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என கட்சி உறுப்பினர்களையும் அமைப்புகளையும் கேட்டுக் கொள்வதுடன், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாதர், மாணவர், இளைஞர் என அனைத்துத் தரப்பினரும் மறியல் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரமாய் பங்கேற்குமாறும் நியாயமான போராட்டத்திற்கு பொது மக்கள் அனைவரும் தங்களின் பேராதரவை அளித்திடுமாறும் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT