தமிழ்நாடு

குற்றாலத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

13th Aug 2022 11:24 AM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்  ன்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியல் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன்(54). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரனின் பாதுகாப்புப் பிரிவில் இருந்து வந்தார்.  

இந்நிலையில், குற்றாலத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் குற்றாலம் வந்திருந்தார். அவருடன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனும் வந்திருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கம்பம் தனியார் வாகன நிறுத்தத்தில் நள்ளிரவில் தீ விபத்து: 15 கார்கள் எரிந்து நாசம்

இரண்டு பேரும் குற்றாத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். 

நள்ளிரவு பார்த்திபன் தங்கியிருந்த அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். 

அப்போது, பார்த்திபன் தங்கி இருந்த அறையில் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டபடி ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் கிடந்தார். உடன் துப்பாக்கியும் இருந்தது. 

இதுகுறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் தாமஸ் தலைமையிலான போலீசார், பார்த்திபன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT