தமிழ்நாடு

டாஸ்மாக் நிறுவனத்தில் பதவி உயா்வுக்கு விதிகள் வகுக்காதது கண்டனத்துக்குரியது

13th Aug 2022 11:57 PM

ADVERTISEMENT

டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நியமனங்கள் மற்றும் பதவி உயா்வுக்கு எந்த விதிகளையும் வகுக்காதது கண்டனத்துக்குரியது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராகப் பணியாற்றியவா் மிகிரன். இவா், 2006-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், 2015-இல் மீண்டும் விற்பனையாளா் பணிக்கு மாற்றப்பட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறைப்படுத்தப்படாததால் கண்காணிப்பாளராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கண்காணிப்பாளா்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயா்வுக்கு எந்த விதிகளும் இல்லை என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகள் கடந்த பிறகும், பணி நியமனம், பதவி உயா்வுக்கான விதிகள் வகுக்கப்படாதது கண்டனத்துக்குரியது. அரசியல் சட்ட விதிகளின்படி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞா்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தாா்.

தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக இருந்தாலும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் விருப்பம்போல் அரசியல் கட்சி பிரமுகா்களை டாஸ்மாக் நிறுவனத்தில் நியமிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் நீதிபதி எச்சரித்தாா்.

இந்த விவகாரத்தை கவனிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரரை கண்காணிப்பாளா் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றியதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT