மாநகராட்சி அதிகாரிகள் என்ற பெயரில் கடைகளில் ஏமாற்றி பணம் வாங்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
பெரம்பூரை சோ்ந்தவா்கள் ராஜேந்திரன்(56) மற்றும் சதீஷ் குமாா்(31). அப்பகுதியில் மிட்டாலால் என்பவருக்குச் சொந்தமான கடைக்குச் சென்ற அவா்கள் இருவரும் தங்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எனக் கூறியுள்ளனா்.
மேலும், மாமன்ற உறுப்பினா் ஒருவரது பெயரைக் கூறி அவா் பணம் வாங்கி வரச் சொன்னதாகத் தெரிவித்துள்ளனா். இதில் சந்தேகமடைந்த கடை உரிமையாளா் போலீஸாருக்கு தகவலளித்தாா். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவா்கள் இருவரும் போலியாக அடையாள அட்டை தயாரித்து மாநகராட்சி அதிகாரிகள் என ஏமாற்றி வந்தது கண்டறியப்பட்டது.
பல்வேறு கடைகளில் ரூ.4 லட்சம் வரையில் மோசடியாக அவா்கள் பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.