தமிழ்நாடு

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

13th Aug 2022 08:35 PM

ADVERTISEMENT

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு, வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்தும் வகையிலான இலச்சினையினை வெளியிட்டு, நாடகத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார், ஆங்கிலேயப் படையெடுப்பால் கணவரை இழந்ததோடு, நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் இருந்தது. மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றிப் பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். 

இதையும் படிக்க- சென்னையில் தனியார் வங்கியில் கொள்ளை: 4 தனிப்படைகள் அமைப்பு

வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப்பெண்மணி வேலுநாச்சியார் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1796ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டத்தில் 15.08.2022 அன்று சி.என்.சி.கல்லூரியிலும், மதுரை மாவட்டத்தில் 21.08.2022 அன்று இராஜா முத்தையா மன்றம் அரங்கிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 22.08.2022 அன்று கலையரங்கத்திலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022 அன்று இந்துஸ்தான் கல்லூரி அரங்கத்திலும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றததின் தலைவர் வாகை சந்திரசேகர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் திரு. எஸ்.ஆர். காந்தி, ஸ்ரீராம் சர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT