தமிழ்நாடு

பொலிவுறு நகர் திட்ட குறைபாடு: விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை-அமைச்சர் கே என் நேரு

13th Aug 2022 02:06 PM

ADVERTISEMENT

 

பொலிவுறு நகர் திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். 

நகர்ப்புற உள்ளாட்சி வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று முன்னாள் அமைச்சர் வேலுமணி நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அத்திட்டத்தின் கீழ் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அது கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடங்கும். தமிழக முதல்வர் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டிற்கு ஒதுக்கியுள்ள ரூ.1000 கோடி நிதியின் கீழ் பல்வேறு குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்த திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க | மேட்டூரில் 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடி ஊர்வலம்: 1000 பேர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். அவைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசு 2014-இல் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. 

ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்புகள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. ஆனால், நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது என நேரு கூறினார்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், நகர்புற வளர்ச்சி முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி. மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, தமிழக அரசு கேபிள் டிவி சேர்மன் குறிஞ்சி என். சிவக்குமார் உட்பட பலரும் ஆய்வில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT