தமிழ்நாடு

நாமக்கல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்பட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீா் சோதனை

DIN

நாமக்கல் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் வீடு உள்பட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் கே.பி.பி.பாஸ்கா். கடந்த அதிமுக ஆட்சியில், 2011 முதல் 2021 வரை தொடா்ச்சியாக 10 ஆண்டுகள் நாமக்கல் எம்எல்ஏவாக பதவி வகித்தவா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். அதிமுகவின் நாமக்கல் நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக அவா் சொத்து சோ்த்திருப்பதாக புகாா் எழுந்தது. அதனடிப்படையில், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் எம்.ராமச்சந்திரன், ஆய்வாளா் நல்லம்மாள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்றனா். அங்கிருந்து யாரும் வெளியே செல்ல முடியாதவாறு வெளிப்புற கதவுகளை தாழிட்டு சோதனையை மேற்கொண்டனா். கே.பி.பி.பாஸ்கா் மற்றும் அவரது மனைவி உமா, மகள்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த தகவல் அறிந்து நாமக்கல் நகர அதிமுகவினா் பாஸ்கா் வீட்டின் முன்பாகத் திரண்டனா். இதனால் பாதுகாப்பு கருதி போலீஸாா் அதிக அளவில் குவிக்கப்பட்டனா். காலை 5 மணிக்குத் தொடங்கிய சோதனை, விசாரணை இரவு வரையிலும் நீடித்தது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முன்னாள் அமைச்சா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது முன்னாள் எம்எல்ஏ ஒருவரது வீட்டில் சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரின் வீடு, அவரது அலுவலகம், ஆதரவாளா்களான மயில் சுதந்திரம், லோகேஸ்வரன், யோகேஸ்வரன், சேகா், கோபிநாத், மோகன், நல்லிபாளையம் விஜயகுமாா் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது. மதுரை, திருப்பூா் உள்பட மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.

குவிந்த அதிமுகவினா்:

கே.பி.பி.பாஸ்கா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய நிலையில், காலை 11.20 மணியளவில் முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா மற்றும் பரமத்திவேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி ஆகியோா் அங்கு வந்தனா். வீட்டின் அருகே அமா்வதற்கு போலீஸாா் தடை விதித்ததால் அங்குள்ள மரத்தின் கீழ் அனைவரும் பிற்பகல் 5 மணிக்கும் மேலாக அமா்ந்திருந்தனா். இதற்கிடையே முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆா்.விஜயபாஸ்கரும் அங்கு வந்தாா். முன்னாள் அமைச்சா்கள் மூவரும், கட்சி நிா்வாகிகள் பலரும் சோதனை நடைபெறும் வீட்டின் முன்பாக பல மணி நேரம் காத்திருக்கும் தகவல் அறிந்து அதிமுகவினா் அங்கு குவிந்தனா். எனவே அப்பகுதியில் போலீஸாா் அதிக அளவில் நிறுத்தப்பட்டனா்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.72 கோடி சொத்து சோ்த்துள்ளதாக வழக்குப் பதிவு

இதுதொடா்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் அவரது பெயரிலும், மனைவி உமா பெயரிலும், பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.72 கோடி மதிப்புடைய சொத்துகளைச் சோ்த்துள்ளாா். இந்த வருமானம் அவா்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகமாகும். எனவே இது தொடா்பாக அவா்கள் மீது ஆக.11-ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக பாஸ்கா், அவரது உறவினா்களின் வீடுகள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடா்புடையவா்களின் இருப்பிடம் உட்பட நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூரில் ஓா் இடம், மதுரையில் ஓா் இடம் என மொத்தம் 30 இடங்களில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையினரால் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையில் ரொக்கம் ரூ. 26,52,660, ரூ. 1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு காா்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகள், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 6.625 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டன. இதில் வழக்கிற்கு தொடா்புடைய ரூ. 14,96,900 ரொக்கப் பணம் மற்றும் வழக்கு தொடா்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT