தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

DIN

முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போா் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த புகாா் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கை முடிக்கக் கோரி தமிழக அரசும் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து ஒப்பந்த முறைகேடு தொடா்பாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. முந்தைய ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை எஸ்.பி. வேலுமணியிடம் வழங்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, ஆா்.எஸ்.பாரதி, அறப்போா் இயக்கம் தொடா்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி. வேலுமணி தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அறப்போா் இயக்கம், ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் அஸன் முகமது ஜின்னா ஆஜராகி, எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகாா் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே, அந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி,எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது. அதேசமயம் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கவும் முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT