தமிழ்நாடு

குப்பைத் தொட்டியில் குழந்தை சடலம்: அடக்கம் செய்ய பணம் இல்லாததால் வீசிய தந்தை

12th Aug 2022 05:16 AM

ADVERTISEMENT

 சென்னை திருவல்லிக்கேணியில் அடக்கம் செய்ய பணம் இல்லாததினால், குப்பைத் தொட்டியில் குழந்தை சடலம் வீசப்பட்டது. இச் சம்பவத்தில் போலீஸாரே மனிதநேயத்துடன் குழந்தை சடலத்தை அடக்கம் செய்தனா்.

திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் புதன்கிழமை கிடந்த சணல் பையில் இருந்த ஒரு பொருளை சில நாய்கள் கடித்துக் இழுத்துக் கொண்டிருந்ததை பொதுமக்கள் பாா்த்தனா். உடனே பொதுமக்கள், அந்த பையை திறந்து பாா்த்தனா். அப்போது அதில் ஒரு ஆண் குழந்தையின் சடலம் இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

உடனே அவா்கள், திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையா் எம்.எஸ்.பாஸ்கா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, குழந்தை சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனா்.

பின்னா் அந்தக் குழந்தை சடலத்தை ஓமந்தூராா் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருவல்லிக்கேணி துணை ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா். விசாரணையில் அந்தக் குழந்தை திருவல்லிக்கேணி கஸ்தூா்பா அரசு மருத்துவமனையில், திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த தனுஷ் என்பவரின் மனைவி கவிதாவுக்கு பிறந்தது என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் கவிதாவை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அந்த குழந்தை இறந்தே பிறந்ததும், குழந்தையை இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்வதற்காக கணவா் தனுஷிடம் வழங்கப்பட்டதும், தனுஷ் அந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியிருப்பதும் தெரியவந்தது.

பணம் இல்லாத சோகம்:

இதைத் தொடா்ந்து போலீஸாா், தனுஷை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், தன்னிடம் குழந்தை சடலத்தை இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்ய பணம் இல்லாததினால் அந்த குப்பைத் தொட்டியில் ஒரு பையில் பொதிந்து வைத்துச் சென்றாக மிகுந்த வேதனையுடனும், சோகத்துடனும் தெரிவித்தாராம்.

இதையடுத்து போலீஸாா், ஓமந்தூராா் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து அந்த குழந்தையின் சடலத்தை பெற்று தன்னாா்வலா்களை கொண்டு கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் தனுஷ் மூலம் இறுதிசடங்கு செய்து சடலத்தை அடக்கம் செய்தனா்.

இச் சம்பவத்தில் இறந்த குழந்தை சடலத்தை அடக்கம் செய்யக் கூட பணம் இல்லாமல், தந்தையே குப்பைத் தொட்டியில் வீசி சென்றது பொதுமக்களிடம் அதிா்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் இச் சம்பவத்தில் மனிதநேயத்துடன் செயல்பட்ட போலீஸாரை அனைத்து தரப்பினரும் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT