தமிழ்நாடு

ஜவுளி மறுசுழற்சி துறையில் கூடுதல் கவனம் தேவை: அமைச்சர் பியூஷ் கோயல்

11th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

ஜவுளி மறுசுழற்சி துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ரீகாமர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோவையில் ஜவுளி மறுசுழற்சி குறித்த மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் பஞ்சுக் கழிவுகள், ஆயத்த ஆடை நிறுவனங்களின் கழிவுத் துணிகள், பயன்படுத்தப்பட்ட துணிகள் உள்ளிட்டவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் துணி, ஆடை வகைகள் தயாரிப்பது குறித்து இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இதில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்வோர், கழிவு மேலாண்மை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இணையவழியில் பங்கேற்று அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
ஜவுளி மறுசுழற்சி தொழில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனாவில் மிகவும் லாபகரமாகவும், அதிக அளவிலும் நடைபெறுகிறது.
துரதிர்ஷ்டவசமாக ஜவுளித் துறை கழிவுகளை இந்தியா சரியாகப் பயன்படுத்துவதில்லை.
அத்தகைய கழிவுகள் மறுசுழற்சி அல்லது மறு செயலாக்கத்துக்குப் பதிலாக குப்பைக் கிடங்குகளுக்குச் சென்று எரிசக்தி உற்பத்திக்காக எரிக்கப்படுகின்றன.
இந்தத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தினால் இந்திய ஜவுளித் துறையினருக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். மறுசுழற்சி, பேஷன் பொருள்கள் தயாரிப்பு போன்றவற்றில் ஜவுளித் தொழில் சார்ந்த அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இது நிலையான, செழிப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உதவியாக இருப்பதுடன், பசுமை நுகர்வோரின் எண்ணிக்கையையும் உயர்த்த உதவும் என்றார்.

Tags : Piyush Goyal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT