தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசத் தேவையில்லை:  கே.எஸ்.அழகிரி பேட்டி

DIN


பென்னாகரம்: ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசத் தேவையில்லை என 75 ஆவது சுதந்திர நாள் பவள விழா சிறப்பு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

இந்திய சுதந்திர பவள விழா ஆண்டினை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதிலும் பவள விழா பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்வாக பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற பாதயாத்திரைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து, பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் இருந்து நடைபயணமாக சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபம் வரை பேரணியாகச் சென்று, பின்னர் நினைவிடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது: 

இந்திய சுதந்திர நாளை அனைவரும் கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கும் சென்றுள்ளனர். ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் தரப்பிலோ யாரும் சுதந்திரத்திற்காக போராடவும், சிறைக்கு சென்றதும் இல்லை. இப்போது சுதந்திர நாள் குறித்து அக்கறை கொள்பவர்கள் இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தார்கள்.

ஆளுநர் மாளிகை அரசியல் பேசுவதற்கான இடம் இல்லை. அதற்கான மரபை பின்பற்ற வேண்டும். அன்றாட தேவைகளில் எண்ணெய் வித்துப் பயிர்கள் முக்கிய இடம் பெறுகிறது. சமையலுக்கு தேவையான எண்ணெய்யை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதனால் எண்ணெய் வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைகின்றனர். புன்செய் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதன்மூலம் எண்ணெய்  பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள்ளும், உற்பத்தியும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 75 ஆவது சுதந்திர நாள் சிறப்பு கூட்டத்தில் கட்சி தொண்டர்களிடையே சிறப்புரையாற்றினார். 

இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏகாம்பரவாணன், தருமபுரி மகளிர் காங்கிரஸ் தலைவி காளியம்மாள், ஐஎன்டிசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மோகன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஏ.வி.எல். இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT