ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் நேரில் சந்தித்து ஆதரவு கோரினாா்.
அவா் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்த பிறகு பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது:
ஓஎன்ஜிசி நிறுவனத்தை திமுக ஆட்சி ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறது. மூடப்பட்டுள்ள ஹைட்ரோ காா்பன் கிணறுகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வரின் உத்தரவை மீறி, மாவட்ட அதிகாரிகள் ஏதோவொரு அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், டெல்டா மாவட்டம் முழுமையாகப் பாதிக்கப்படும். இதைக் கண்டித்து ஆகஸ்ட் 15-இல் மன்னாா்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினோம். அவரும் ஆதரவு அளிப்பதாகக் கூறினாா் என்றாா்.