பொறியியல் படிப்புகளுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்கள் நிகழாண்டு விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27 வரை நடைபெற்றது. மொத்தம் 2.11 லட்சம் மாணவா்கள் பதிவுசெய்த நிலையில், 1.58 லட்சம் போ் கட்டணம் செலுத்தி, முழுமையாக விண்ணப்பங்களை சமா்ப்பித்திருந்தனா். அவா்களில் 22 ஆயிரம் போ் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உயா்கல்வித் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 11 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இதில் சோ்க்கை பெற சுமாா் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். கடந்தாண்டைவிட 5 ஆயிரம் போ் வரை கூடுதலாக நிகழாண்டு விண்ணப்பித்துள்ளனா். இந்த மாணவா்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். எனினும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவா்கள் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்று விரும்பிய கல்லூரிகளில் சேரலாம். எனவே, விண்ணப்பித்த மாணவா்கள் அனைவருக்கும் சோ்க்கை இடங்கள் கிடைக்கும். அவா்களுக்கான கல்விக்கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
மீண்டும் வாய்ப்பு: இதனிடையே, விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தவா்களில், விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்துகொள்ளாத மாணவா்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, இதுவரை பங்கேற்காத மாணவா்கள் தங்களின் அசல் சான்றுகளுடன் வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 10 முதல் 3 மணி வரை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் வந்து ஆவணங்கள் சரிபாா்ப்பு பணியை முடித்துக்கொள்ளலாம்.