மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை நகர விடாமல் காலால் தடுத்து நிறுத்திய யானையை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
பகல் நேரங்களில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். தற்போது தாளவாடி மலைப் பகுதியில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரியில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு வனப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழக -கா்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை சென்றபோது ஒரு காட்டு யானை லாரியை வழிமறித்தது.
அச்சமடைந்த லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்தினாா். இதைத் தொடா்ந்து காட்டு யானை லாரியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது.
மீண்டும் லாரியை ஓட்டுநா் இயக்கியபோது காலால் தடுத்து நிறுத்திய யானை கரும்பு எடுத்துத் தின்றது.
இதனால் மற்ற வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
சுமாா் அரை மணி நேரம் கழித்து யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.