சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. முதலில் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்திய இவ்வழக்கு பின்னா் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் உள்பட போலீஸாா் 10 போ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இதனிடையே தாமாக முன்வந்து விசாரணை நடத்தியபோது, காவல் துறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. மனரீதியான ஆலோசனைகளை வழங்கும் புத்தாக்கப் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, இப் பயிற்சி வழங்கப்படாமல் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை முதன்மைச் செயலா், தமிழக காவல்துைத் தலைவா் ஆகியோா் காணொலி வாயிலாக ஆஜராகி காவல்துறையினருக்கான பயிற்சி முறையாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா். மேலும், தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காவல்துறையினருக்கு பயிற்சி வழங்குவதற்கான பட்டயப் படிப்பில் 246 போ்,
பெங்களூரு நிமான்ஸ் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனா். இதற்கான கட்டணம் தமிழக காவல்துறையால் செலுத்தப்பட்டுள்ளது. இதில் தோ்ச்சி பெறும் போலீஸாா், காவல் துறையினருக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுவா்.
காவல்துறையினருக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்குவதற்காக கடந்த 2018 முதல் 2021 வரை ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முழுமையாகப் பயிற்சி வழங்கவில்லை. மேலும், 2022-23 ஆம் ஆண்டுக்கு காவலா் புத்தாக்க பயிற்சிக்காக ரூ.61.51 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மன அழுத்தத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4,484 போலீலாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.