தமிழ்நாடு

ஆகஸ்ட் 30-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

10th Aug 2022 02:22 PM

ADVERTISEMENT

 

திருப்பூர்: விலைவாசி உயர்வு, மின்சார சட்டதிருத்த மசோதா ஆகியவற்றைக் கண்டித்து தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. இந்த சந்திப்பில் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் பேசியதாவது: 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூரில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த மாநாடு முதல்முறையாக திருப்பூரில் நடைபெற்ற போதிலும் ஏற்பாடுகள் அனைத்தையும் வரவேற்புக்குழு சிறப்பான முறையில் செய்திருந்தது. இந்த மாநாட்டின் இறுதி நாளில் நடைபெற்ற பேரணியின் சீருடை அணிந்த செந்தொண்டர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றிருந்தது நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. இந்தப் பேரணியில் எந்தவிதமான சிறு அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் இல்லாமல் மிகுந்த எழுச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் டி.ராஜா, அமர்ஜீத்கவுர், கே.நாராயணா, பினாய் விஸ்வம், ஆனிராஜா ஆகிய 5 பேர் பங்கேற்றனர். 

மாநாட்டில் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பு: நான்கு நாள் மாநாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்.கொள்ளைகளைத் திணிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஆட்சி நடத்துவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர். 

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியுள்ள நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற அனைத்தும் நிலைகுலைந்த நிலையில் உள்ளது. ஒரு தனித்தன்மையுடன் இயங்க முடியாமல் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட அமைப்புகளாக செயல்பட வேண்டிய நிர்பந்த நெருக்கடிகளாக உருவாகியுள்ளது ஜனநாயகத்துக்கு பேராபத்தாக உருவாகியுள்ளது. மக்கள் கடுமையான துன்பத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகி வருகின்றனர். 

திருப்பூரில் கட்டுக்கடங்காத நூல் விலை உயர்வுகாரணமாக பின்னலாடைத் தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வுகாண வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். 

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கரோனா நோய்த்தொற்று காரணமாக அதிக அளவில் மூடப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 

இதையும் படிக்க | ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாததற்கு ஆய்வுகள் கூறும் காரணம் என்ன?

அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகம் நியமிக்கப்படுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. ஆகவே, இத்தகைய பிரச்னைகள் குறித்து எல்லாம் விவாதிக்கப்பட்டது. 

ஆகவே, வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர வேண்டும் என்றும், அதனை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்த மாநாட்டில் 101 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், 40 சதவீதம் பேர் கட்சியில் பொறுப்புகளில் இல்லாத புதிய இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழுவில் 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவராக திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மத்திய அரசின் விலைவாசி உயர்வு, மின்சார திருத்த மசோதா ஆகியவற்றைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில், கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றார். 

பிகாரில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் நல்ல முன்னேற்றமாகும். பாஜகவை விட்டு மாநிலக் கட்சிகள் வெளியேறுவதின் தொடக்கம்தான் பிகார். பாஜகவின் சுயரூபம் மற்ற கட்சிகள் மட்டுமின்றி மக்களிடம் படிப்படியாகத் தெரியவருகிறது என்றார். 

இந்த சந்திப்பின்போது திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ரவி, துணைமேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT