தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

DIN


போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இயங்கி வரும் மாணவர்களின் விடுதிகளை கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், போதை பாதை அழிவுப் பாதை அதில் யாரும் செல்லாதீர்கள் என்றும் முதல்வர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய நிறைவுரையில் போதைப் பொருள் தடுப்பு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் சிறப்பாக செயல்படுவதாக  பாராட்டு தெரிவித்ததோடு, மதுவிலக்கில் உள்ள மத்திய நுண்ணறிவுப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

முதலில், “எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்து விட்டேன்” என்று உங்கள் லிமிட்டில் உள்ள ஒவ்வொரு காவல்துறை ஆய்வாளரும் உறுதி எடுத்துக் கொண்டால் போதும் - அதுவே முதல் வெற்றி. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுத்துவிட முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் “போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு” டிஎஸ்பி பதவி உருவாக்கப்பட்டு, இந்தப் பிரிவு வலுப்படுத்தப்படும். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கு மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். அண்டை மாநிலக் காவல்துறையின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் எல்லைப்புற சோதனைச் சாவடிகளை வலுப்படுத்திட வேண்டும்.

தேனி, திண்டுக்கல் போன்ற மலையடிவாரப் பகுதிகள், மறைவான இடங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இதர பயிர்களுக்கு இடையில் கஞ்சா பயிரிடுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால், மலையை ஒட்டி அமைந்திருக்கும் வேளாண் நிலங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகள் செய்ய வேண்டும்.

சாதாரணப் பயணிகள் மூலமாகவும் கூரியர் வழியாகவும் போதைப் பொருள் வருவதாகச் சொல்லப்படுகிறது. பயணிகள் பேருந்துகள் கண்காணிக்கப்பட வேண்டும். கூரியர் நிறுவனங்களுக்கு இது குறித்த எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கெனத் தனிக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு, அதில் பள்ளி மற்றும் மாணவர்களை இணைத்து விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் இருக்கிறது. இதனை நுண்ணறிவுக் காவல்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைக் கண்காணிக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் வார்டன்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும்.

போதைப் பொருள் தொடர்பான ரகசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரிவிக்கக்கூடிய வகையில் தனியாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட வேண்டும்.

போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகளின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்துபவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

காவல்துறை மட்டுமல்ல, அத்துறையுடன் சேர்ந்து மக்கள் அனைவரும் காவலர்களாக மாறி இந்தப் போதைப் பாதையை அடைத்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு ஒரு சில முக்கிய அறிவிப்புகளை நான் இங்கே வெளியிட விரும்புகிறேன்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவோடு போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு இணைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதற்கு விரைவில் அரசாணை வழங்கப்படும்.

என்டிபிஎஸ் வழக்குகளை விசாரிக்க, தற்போது 12 சிறப்பு நீதிமன்றங்கள்  இருக்கின்றன. இனி இரு மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் என முதற்கட்டமாக அமைக்கப்படும்.

போதைப் பொருள் தடுப்பில் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகவே, இப்பிரிவிற்கு தனியாக ஒரு “சைபர் செல்”உருவாக்கப்படும்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு – மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுடன் இணைக்கப்படுவதால், மதுவிலக்குப் பிரிவில் உள்ள “மத்திய நுண்ணறிவுப் பிரிவு” மேலும் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

SCROLL FOR NEXT