தமிழ்நாடு

சுவாமிமலை ஸ்தபதி வீட்டிலிருந்த பல கோடி மதிப்புள்ள சிலைகளின் விவரம்

PTI

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஸ்தபதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி மதிப்புள்ளவை என்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சிலைகள் திருடப்பட்ட கோயில்கள் மற்றும் காலம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் 8 பழங்காலச் சிலைகளை சிலைத் திருட்டு தடுப்புக் காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

இந்த எட்டு சிலைகளில் ஐந்து சிலைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் சிலைத் திருட்டு தடுப்புக் காவல் பிரிவினா் கண்டறிந்துள்ளனர்.

சுவாமிமலை சா்வமானிய தெருவைச் சோ்ந்த ஸ்தபதி மாசிலாமணி வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சிலைத் திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், மாசிலாமணி வீட்டில் இப்பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளா் பாலமுருகன், ஆய்வாளா் இந்திரா மற்றும் காவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கிருந்த 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலை, அமா்ந்த நிலை மற்றும் நின்ற நிலையிலான புத்தா் சிலைகள், போக சக்தி அம்மன், சிவதாண்டவம், மீனாட்சி சிலை, விஷ்ணு சிலை, ரமணா் சிலை ஆகிய சிலைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதில், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட போக சக்தி அம்மன் சிலை 200 கிலோ எடையுடையதாக இருந்தது. ஆண்டாள் மற்றும் விஷ்ணு சிலைகள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. சிவதாண்டவம் ஆடும் நடராஜர் சிலை குறைந்தது 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், சர்வதேச சந்தைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அனைத்தும் நாங்கள் செய்தவை: மாசிலாமணி மகன் கௌரி சங்கா் 

இந்த சிலைகள் நாங்கள் உருவாக்கியதுதான். நாங்கள் செய்த சிலையைப் பழங்காலச் சிலைகள் எனக் கூறி, காவல் துறையினா் எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டனா்.

இச்சிலைகள் பழைமையான சிலையா என தொல்லியல் துறையினா் மூலம் ஆய்வு செய்துவிட்டு தருவதாகக் கூறினா். நாங்கள் இங்கேயே சோதனை செய்து காட்டுவதாகக் கூறியும், காவல் துறையினா் ஏற்கவில்லை என்று கௌரி சங்கா் என்று கூறியிருந்த நிலையில், இன்று ஐந்து சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூறியிருக்கிறது.

இதனிடையே, 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலையை மட்டும் நிகழ்விடத்திலேயே வைத்துவிட்டு, மற்ற சிலைகளைச் சிலைத் திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் சென்னைக்கு எடுத்து வந்திருந்தனர்.

எடை அதிகமாக இருந்ததால் சிவகாமி சிலையை நிகழ்விடத்திலேயே தொல்லியல் துறையினா் ஆய்வு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் நடந்த சோதனை

சிலைக் கடத்தல் பின்னணியில் மாசிலாமணியின் பெயர் வந்ததால், அவரது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் முதலில் சோதனை நடத்தினர். அங்கு எதுவுமே கிடைக்கவில்லை. பிறகுதான் சுவாமிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று சென்றனர்.

சுவாமிமலை வீட்டில் முதலில் ஒரே ஒரு நடராஜர் சிலை மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்திய நிலையில் மேலும் 7 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த சோதனையின் போது, பழங்கால சான்றிதழ்களும் கிடைத்துள்ளன. அது போல, போக சக்தி அம்மனின் மிகப் பழமையான சிலையை உறுதிப்படுத்தும் வகையில் 2017ஆம் ஆண்டு பெறப்பட்ட தொல்லியல் துறையின் சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தச் சிலைகளின் உரிமையாளர் தான் என்பதை நிரூபிக்கும் எந்த ஆவணமும் மாசிலாமணியிடம் இல்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT