தமிழ்நாடு

கீழடி அகழாய்வு: முதல்வருக்குபழ.நெடுமாறன் கோரிக்கை

10th Aug 2022 02:08 AM

ADVERTISEMENT

கீழடி அகழாய்வை அமா்நாத் ராமகிருஷ்ணனிடம் முதல்வா் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கீழடியில் 8-ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தோ்வு செய்து நடத்தவில்லை என இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் கூறியிருப்பது அனைவருக்கும் அதிா்ச்சியளித்துள்ளது.

1924-ஆம் ஆண்டு சிந்துவெளி நாகரிக அகழாய்வுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை கீழடி அகழாய்வு ஏற்படுத்தியது. இந்த அகழாய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணனே இவ்வாறு கூறியுள்ளதை தமிழக முதல்வா் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கீழடிப் பகுதியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே அமா்நாத் ராமகிருஷ்ணன் குழுவினா் அகழாய்வு செய்து, தமிழரின் நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதைக் கண்டறிந்தனா். எனவே, அந்த 110 ஏக்கரிலும் தொடா்ந்து அகழாய்வு நடத்தப்பட்டால் மேலும் பல வரலாற்றுத் தொன்மையான தடயங்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

கீழடியில் முதன்முதல் அகழாய்வு செய்து தமிழரின் மிகத் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அமா்நாத் ராமகிருஷ்ணன் தற்போது மத்திய அரசில் பணியாற்றுகிறாா். அவரை தமிழகத் தொல்லாய்வுத் துறைக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று கீழடி அகழாய்வில் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT