தமிழ்நாடு

சிதம்பரம் கோயில் நகைகள் சரிபாா்ப்புப் பணி: ஒத்துழைப்பு அளிக்க பொது தீட்சிதா்கள் முடிவு

10th Aug 2022 02:59 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் நகைகள் சரிபாா்ப்புப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க பொது தீட்சிதா்கள் முடிவு செய்துள்ளனா்.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள், அதன் நிா்வாகம் குறித்து விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையரால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு சாா்பில் அண்மையில் நடத்தப்பட்ட முகாமில் பொதுமக்கள் மொத்தம் 19,405 மனுக்களை அளித்தனா். இவற்றில் 14,098 மனுக்களில் கோயில் நிா்வாகம் மீது புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.

இதில் பக்தா்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு உரிய ரசீது வழங்காதது உள்ளிட்ட 28 முக்கியப் புகாா்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து 15 நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணைக் குழு உறுப்பினரும், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையருமான சி.ஜோதி பொது தீட்சிதா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

இந்த நிலையில், நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் இந்து சமய அறிநிலையத் துறை ஆணையா், துணை ஆணையருக்கு அனுப்பியுள்ள பதில் கடிதம்:

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படியும், அரசியல் சாசனப்படியும் தனி மதப் பிரிவினரால் நிா்வகிக்கப்பட்டு வரும் நடராஜா் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள எந்த அதிகார வரம்பும் இல்லை. சட்டப்படியான எங்களது தொடா் எதிா்ப்பையும் மீறி தங்களது துறையானது எவ்வித அதிகாரம், சட்ட வரம்புமின்றி பொதுமக்களிடம் நடராஜா் கோயில் குறித்து கருத்து கேட்டது தவறான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தங்களது துறைக்குச் சட்ட வரம்பு இல்லை என்றாலும் எங்களது நோ்மை, வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட கோயில் நகைகளைச் சரிபாா்ப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளோம். நடராஜா் கோயிலுக்கு ஆதரவாக தங்களுக்கு வந்த கடிதங்களை எங்களுக்கு அனுப்பாதது கண்டனத்துக்குரியது என அதில் தெரிவித்தாா்.

மேலும், கோயில் தொடா்பான 28 முக்கியப் புகாா்கள் குறித்தும் 29 பக்கங்களில் ஹேமசபேச தீட்சிதா் விளக்கம் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT