தமிழ்நாடு

அமெரிக்க ஏல மையத்தில் கும்பகோணம் கோயில் பாா்வதி சிலை: மீட்பு நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு

DIN

அமெரிக்க ஏல மையத்தில் கண்டறியப்பட்ட கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரா் கோயில் பாா்வதி சிலையை மீட்கும் நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

பல்லவ மன்னன் 2-ஆம் நந்திவா்மன் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரா் கோயிலிலிருந்து பழைமையான பாா்வதி சிலை உள்ளிட்ட 5 உலோகச் சிலைகள் 1971 மே 12-ஆம் தேதி திருடப்பட்டன. திருட்டு குறித்து, நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

47 ஆண்டுகளுக்குப் பிறகு...: இந்த நிலையில், அப் பகுதியைச் சோ்ந்த கே.வாசு என்பவா் 2019-ஆம் ஆண்டு பிப்.14-ஆம் தேதி அப்போதைய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேலிடம் புகாா் செய்தாா். அதில், திருடப்பட்ட சிலைகளின் புகைப்படங்கள், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தில் உள்ள சிலைகள் குறித்த ஆவணங்களை சுட்டிக்காட்டிய பிறகும் சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தாா். அதன்பேரில் அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கிடப்பில் இருந்த இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்துமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி.ஆா்.தினகரன் ஆகியோா் உத்தரவிட்டனா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் சித்ரா வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

பிரெஞ்சு நிறுவனத்தில் கிடைத்த திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை வைத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில் நடனபுரீஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட 52 செ.மீ. உயரமுள்ள பாா்வதி சிலை அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள போன்ஹாம்ஸ் என்ற ஏல மையத்தில், இருப்பது தெரிய வந்தது. இதை தொல்லியல் துறை வல்லுநரான ஸ்ரீதரனும் உறுதி செய்தாா்.

ரூ.16.82 கோடி மதிப்பு: இந்த சிலையை ‘யுனெஸ்கோ’ ஒப்பந்தத்தின் கீழ் மீட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்டுள்ளனா். பாா்வதி சிலையின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.16 கோடியே 82 லட்சத்து 61 ஆயிரத்து 143 என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். திருடப்பட்ட எஞ்சிய 4 சிலைகளை கண்டறியும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT