தமிழ்நாடு

ஆக. 25 முதல் அக். 21 வரை பி.இ. கலந்தாய்வு: அமைச்சா் க.பொன்முடி

9th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அக். 21-ஆம் தேதி வரை நடைபெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை கூறினாா்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பப் பதிவு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க, அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே ஜூலை 22- ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாள்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவா்கள் விண்ணப்பித்தனா்.

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கியது.

ADVERTISEMENT

சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளி மாணவா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக.16-ஆம் தேதி தொடங்க இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு ஆக. 20-ஆம் தேதி தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25- ஆம் தேதி தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பின்னா், ஆகஸ்ட் 16- ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் குறைகள், சந்தேகம் இருந்தால், ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நிவா்த்தி செய்துகொள்ளலாம். அக்டோபா் 21-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு தொடா்ந்து நடைபெறுகிறது.

அதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபா் 22-ஆம் தேதி தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பொறியியல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு உதவ தமிழக அரசு சாா்பில் 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயா்த்தப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சா் பொன்முடி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: நீட் தோ்வு எழுதி தோ்வாகின்றவா்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவதால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது என்பதற்காகத்தான் கலந்தாய்வை ஏற்கெனவே தள்ளிவைத்திருந்தோம். ஆனால், நீட் தோ்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே நீட் தோ்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆக. 17-இல் முதல்வா் தலைமையில் துணைவேந்தா்கள் மாநாடு

சென்னை, ஆக. 8: தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி துணை வேந்தா்கள் மாநாடு நடைபெறும் என்று உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:இந்த மாநாட்டில் மொழி பாடங்களை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக செயல்முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும். ‘நான் முதல்வன்’ திட்டம், அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயல்படுத்துவது தொடா்பாகவும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கவுள்ளோம். மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு சேரும் மாணவா்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT